by Bella Dalima 25-04-2018 | 5:36 PM
2013 ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆசாராம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஆசாராம் தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆசாராம் சாமியாருக்கு உலகெங்கும் ஆசிரமங்களும் இலட்சக்கணக்கான பக்தர்களும் உண்டு.
இன்று தீர்ப்பு வெளியாகும்போது பெரும் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், ஆசாராம் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையிலேயே நீதிபதி தீர்ப்பை வழங்கினார்.
அவருக்கு தண்டனை விதிப்பதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஆசாராமுக்கு எதிராக சாட்சி கூறிய பத்திரிகையாளர் ஒருவர் உள்ளிட்ட 9 பேர் தாக்கப்பட்டனர்.
சாஜகான்பூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் ஆசாரமுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.
குறித்த பெண்ணின் தந்தை அந்த சம்பவத்திற்கு முன்பு அவரது சொந்த செலவில் ஆசாராம் பாபுவுக்கு ஆசிரமம் ஒன்றைக் கட்டியிருந்தார்.
அவரது 16 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆகஸ்ட் 7, 2013 அன்று சிந்வாரா குருகுலத்தில் இருந்து அவரது தந்தைக்கு அழைப்பு வந்தது.
அந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அதை ஆசாராம் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த நாள் அந்தக் குடும்பம் கிளம்பி ஆசிரமத்திற்கு சென்றுள்ளது.
ஆகஸ்ட் 15 அன்று பேயை விரட்டுவதாகக் கூறி ஆசாராம் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இலஞ்சம் , மிரட்டல் என அனைத்தையும் கடந்து தங்களைவிடவும் பல மடங்கு செல்வாக்கு நிறைந்த ஆசாராம் பாபுவுக்கு எதிராக அந்தக் குடும்பம் போராடி தற்போது வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.