சர்வதேச மலேரியா தினம் இன்று

சர்வதேச மலேரியா தினம் இன்று

by Staff Writer 25-04-2018 | 7:53 AM
COLOMBO (News 1st) சர்வதேச மலேரியா தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. மலேரியா நோய் என்பது ‘பிளாஸ்மோடியம்’ என்ற கண்ணுக்கு புலப்படாத ஒரு ஒட்டுண்ணி மூலம் ஏற்படுகின்றது. நன்னீரில் உற்பத்தியாகும் ‘அனோபிலிஸ்’ வகை பெண் நுளம்பு மூலம் மனிதனுக்கு பரவுகின்றது. இவ்வகை பெண் நுளம்புகள் உணவுக்காக மனித இரத்தத்தை உறிஞ்சும் போது மலேரியா பாதித்த நபரிடமிருந்து ஒட்டுண்ணிகள் இரத்தத்துடன் உறிஞ்சப்படுகின்றது. இவ்வாறு இந்த ஆட்கொல்லி மலேரியா பரவலடைகின்றது. மலேரியாவிலிருந்து விடுபட்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டிருப்பதும் சிறப்புக்குரியதாகும். எவ்வாறாயினும் மலேரியா காய்ச்சல் தொடர்பில் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். உலகில் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று தான் மலேரியா, இதன் தாற்பரியம் அறிந்து ஒவ்வொரு வருடமும் இதே போன்றொரு நாள் சர்வதேச மலேரியா தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மலேரியாவிற்கு எதிராக செயற்பட தயார் என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் சர்வதேச மலேரியா தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. பிறரை விட கர்ப்பிணிகளுக்கு மலேரியாவின் தாக்கம் கடுமையானது என்பதுடன் குறைப்பிரசவம், கரு கலைதல், இறந்து பிறத்தல் போன்ற பேறுகால ஆபத்துக்கள் மலேரியாவால் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். மலேரியாவிலிருந்து விடுபட்ட ஓர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்ற கோரிக்கையை இன்றைய தினம் உலக சுகாதார தாபனம் முன்வைத்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் மலேரியா தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழப்பவர்களின் வீதத்தை 40 வீதமாக குறைப்பதற்கு இம்முறை எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 91 நாடுகளில் 216 மில்லியன் பேர் உலகளாவிய ரீதியில் மலேரியா தாக்கத்திற்கு உட்பட்டனர் என்றால் புருவம் உயர்த்தும் சந்தர்ப்பம் இங்கு ஏற்படுகின்றது. எவ்வாறாயினும் அந்த தொகையில் 4 45,000 மலேரியா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மலேரியாவினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒரு முறையும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதாக உலக சுகாதார தாபனம் குறிப்பிடுகின்றது. நாளை இந்த அனர்த்தத்தை எம்மில் பலர் எதிர்கொள்ள கூடிய சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வதற்கு இயன்றளவு முயற்சிப்போம்!