by Bella Dalima 17-04-2018 | 8:27 PM
Colombo (News 1st)
பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளை மாவட்ட செயலகங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு இன்றும் நடைபெற்றது.
நேற்று (16) ஆரம்பமான இந்த நேர்முகத் தேர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மாவட்ட செயலகங்களில் இடம்பெறவுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அறிவித்தலுக்கு அமைய, விண்ணப்பித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.
அரச பணிகளுக்காக 52,000 பட்டதாரிகள் தமது அமைச்சில் பதிவு செய்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
இதுவரை பதிவு செய்யாத பட்டதாரிகள் மாவட்ட செயலகங்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளுமறு அமைச்சின் செயலாளர் அசலங்க தயாரத்ன கூறினார்.
இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த 700 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் தெரித்தார்.
அவர்களுக்கும் கட்டம் கட்டமாக நேர்முகத் தேர்வு இடம்பெற்று வருகிறது.
பட்டப்படிப்பின் பின்னர் பட்டதாரிகள் மேலதிக தகைமைகளை விருத்தி செய்துகொள்ள நடவடிக்கை எடுக்காமையினால் குறைந்த புள்ளிகளையே அதிகமானவர்கள் இன்று பெற்றுக்கொண்டதாக மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.