by Bella Dalima 14-04-2018 | 7:34 PM
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் விதமாகவும் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் இராணுவங்கள் நேற்று இரவு முதல் அங்கு வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸின் இராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இதனால் டமாஸ்கஸ் நகரமே ஒரே புகை மண்டலமாகவும் கட்டிடக் குவியல்களாகவும் காட்சியளிக்கிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர்.
இந்த மூன்று தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர்.
சிரிய அரசாங்கத்திற்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிழக்கு கட்டா பகுதியில் இருந்த டூமா நகரை சிரிய அரசுப்படைகள் கடந்த வாரம் மீண்டும் கைப்பற்றின.
இந்த கைப்பற்றலின்போது, கடந்த 7 ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான வகையில், இரசாயனக் குண்டுகளை வீசி சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சிரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா இரசாயன ஆயுதத் தாக்குதலை தடுக்கவில்லை, ஆதரவாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பர் நேற்று இரவு வெள்ளை மாளிகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
சிரியாவில் ஆபத்து மிகுந்த இரசாயன ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளன, தயாரிக்கப்படுகின்றன. அவற்றை அழிக்கும் வரை அமெரிக்க இராணுவம் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என அதில் அறிவித்திருந்தார்.
சிரியா மீது நடத்தும் இந்தத் தாக்குதலில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடாது என்றும் சிரியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கக்கூடாது என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோரும் அறிக்கை வெளியிட்டனர். தங்கள் நாட்டுப் படைகளும், அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும் என்று அறிவித்தனர்.
இதையடுத்து, சிரியாவின் டமாஸ்கஸ் நகர் மீது அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் இராணுவ போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
இதுவரை டமாஸ்கஸ் நகர் மீது 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.