மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியில் மீண்டும் விரிசல்
by Bella Dalima 11-04-2018 | 6:52 PM
Colombo (News 1st)
அமைச்சர் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கட்சித் தலைமையின் சில தீர்மானங்கள் காரணமாக தொடர்ந்தும் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை தொடர முடியாது என ஜனநாயக இளைஞர் இணையம் இன்று அறிவித்துள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி தற்போதைய ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் இளைஞர் அமைப்பாக ஜனநாயக இளைஞர் இணையம் செயற்பட்டு வந்ததாக அதன் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
தமக்கும் கட்சிக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு காரணமாக மக்களுக்கான எவ்வித சேவையையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என அந்த அமைப்பு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனநாயக இளைஞர் இணையம், ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகுவதற்கான முக்கிய காரணங்களையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சியின் உண்மையான தொண்டர்கள் ஓரங்கட்டப்பட்டு கட்சியோடு எவ்வித சம்பந்தமும் இல்லாதவர்களின் ஆலோசனையோடு பாதகமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு எவ்வித சேவையையும் ஆற்றவில்லை எனவும் அமைச்சு அந்தஸ்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமைச்சராவதற்கு முன்னர் காணாமற்போனவர்கள், அரசியல் கைதிகள் குறித்து கண்ணீர் வடித்தவர் அமைச்சரானதன் பின்னர் மௌனித்துவிட்டதாகவும் ஜனநாயக இளைஞர் இணையம் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுவிப்பு, காணி மீட்புப் போராட்டங்கள் தொடர்பிலும் பங்களிப்பு வழங்க அமைச்சர் மறுத்துள்ளதாக அவர்கள் மற்றுமொரு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியில் கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானம் எடுப்பதற்கு மாறாக, முடிவுகளை அறிவிக்கவே கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயக இளைஞர் இணையத்தின் 16 உறுப்பினர்கள் இன்றுடன் ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகியுள்ளனர்.