நன்னீர் தடுப்பணை காரணமாக மீன்பிடி பாதிப்பு

தொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை திறந்து விடப்படாமையால் மீன்பிடி முற்றாக பாதிப்பு

by Staff Writer 08-04-2018 | 7:41 PM
COLOMBO (News 1st) - யாழ்ப்பாணம் - தொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை திறந்து விடப்படாமையால் மீன்பிடி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டமனாறு கடல்நீரேரி யாழ்ப்பாணத்தின் வடக்கிலுள்ள இந்து சமுத்திரத்துடன், ஒரு சிறிய கால்வாயூடாக சென்று தொண்டமானாற்றுக்கு அருகில் இணைகிறது. தொண்டமானாறு கடல் நீரேரியில் கடல் நீர் கலப்பதைத் தவிர்க்கும் நோக்கில் 1953 ஆம் ஆண்டு நன்னீர் திட்ட குறுக்கு அணை நீர்ப்பாசன திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டது. தொண்டமானாறு கடல்நீரேரியில் கடல் நீரினை தடுக்கும் நோக்கிலும், யாழ்.குடாநாட்டில் உவர் நீர் உட்புகுவதனை தடுக்கும் நோக்கிலும் இந்த நன்னீர் தடுப்பணை அமைக்கப்பட்டது. எனினும் மீனவர்களின் நலன் கருதி இறால் மற்றும் மீன் பெருக்கத்தினை அதிகரிக்கும் நோக்கில் இந்த நன்னீர் தடுப்பணை குறிப்பிட்ட போகத்திற்கு திறந்து விடப்பட்டது. எனினும் கடந்த சில வருடங்களாக நன்னீர் தடுப்பணை திறந்து விடப்படாமையால் இறால் மற்றும் மீன் பெருக்கம் இல்லாது போயுள்ளதுடன், மீனவர்களின் ஜீவனோபாயமும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=S50IsZd08h8