by Staff Writer 28-03-2018 | 7:51 PM
COLOMBO (News 1st) - பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியது.
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி நியோமால் ரங்கஜீவ தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அதனைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட கைதிகளை அடையாளம் காட்டுவதற்கு நியோமால் ரங்கஜீவ தலைமை தாங்கி செயற்பட்டதாக இந்த மோதல் தொடர்பில் ஆராய்ந்த மூவரடங்கிய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம் நியோமால் ரங்கஜீவ வெலிக்கடை மோதலின் பிரதான சந்தேகநபராவார்
கடந்த வருடம் பிலியந்தலையில் போதைப்பொருள் கடத்தல் காரர்களை கைது செய்ய முயன்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நியோமால் ரங்கஜீவ கடும் காயங்களுக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.