அவுஸ்திரேலிய பயிற்சியாளர் லீமன் பதவி விலகுகிறார்?

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமன் பதவி விலகுகிறார்?

by Bella Dalima 27-03-2018 | 4:49 PM
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமன் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வீரர்கள் அறையில் இருநாட்டு வீரர்கள் மோதல், களத்தில் மோதல், ரசிகர்களுடன் வாக்குவாதம் என பல சர்ச்சைகளில் அவுஸ்திரேலியா சிக்கி இருந்தது. அதோடு, புதிதாக பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் சிக்கியது அவமானத்தை ஏற்படுத்தியது. அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். இதனால் அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சபை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் தலைவர் பதவியும், வார்னரின் துணைத்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்மித்திற்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தது. அதோடு, 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக அவுஸ்திரேலிய பயிற்சியாளர் லீமனும் பதவி விலகுகிறார். இதை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி 30 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு லீமன் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்வார் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து லீமன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் விசாரணைக்கு முன்பே பதவி விலகுவது சரியாக இருக்கும் என்று லீமன் கருதுகிறார். அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் கிளார்க்,
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் லீமனுக்கும் சமமான பங்களிப்பு இருக்கும். அவருக்கு இந்த மோசடி தெரிந்து தான் நடத்திருக்கும்
என்று கூறி இருந்தார். 2019 ஆசஷ் டெஸ்ட் தொடர் வரை லீமனின் பதவிக்காலம் உள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் முன்னதாகவே அவர் பொறுப்பை விட்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.