by Staff Writer 21-03-2018 | 1:24 PM
COLOMBO (News 1st) - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வித்தியா கொலை வழக்கில் இருந்து ஏற்கனவே நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிராகவே இந்த வழக்கு தொடர்கின்றது.
ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் இன்றைய வழக்கு விசாரணை நடைபெற்றபோது சந்தேகநபரை எதிர்வரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ட்ரயல் அட் பார் விசாரணையில் சாட்சியாளராக நெறிப்படுத்தப்படாததால் சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு எற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பி அறிக்கையின்படி கடத்தல் , கூட்டுகற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.