கொழும்பு,அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

கொழும்பு மற்றும் அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

by Staff Writer 19-03-2018 | 8:47 PM
COLOMBO (News 1st) - கொழும்பு மெசஞ்சர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் போாதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு சென்று மீளத்திரும்புகையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். தெமட்டகொட பகுதியைச் ​சேர்ந்த 42 வயதான அண்டனி ராஜ் என்பவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் மற்றும் உயிரிழந்தவருக்கிடையில் காணப்படும் பிரச்சினையின் விளைவாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் காரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி, தலைமறைவாகினர். தலைமறைவாகிய சந்தேகநபர்களை தேடுவதற்காக பொலிஸ் அதிரடிப்படையினர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சந்தரப்பத்தில் பெண்ணொருவரும் காரில் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். காயமடைந்தப் பெண்ணின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதுடன், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, கடந்த ஏழாம் திகதி புதுக்கடை சிறைச்சாலைகள் வீதியில் உள்ள காவலரணுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மனித தலைக்கான உடல் அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. அங்குணுகொலபெலஸ்ஸ நீதவான் குஷிகா குமாரசிறி முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அங்குணுகொலபெலஸ்ஸ பாழடைந்த குழு ஒன்றுக்குள் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடல் அண்மையில் கண்டுபடிக்கப்பட்ட தலையுடையது என பொலிஸார் தெரிவித்தனர். முல்லேரியாவ பகுதியைச் சேர்ந்த கொஸ் மல்லி எனப்படும் பண்டிதகே சாந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்புறுபிட்டிய பகுதியில் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட 8 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உயிரிழந்தவர் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளது. இதேவேளை, கொழும்பு - அத்துருகிரிய ஒரவல கல்வருசா வீதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மற்றுமொரு மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=gbHCWex0DQ4