by Bella Dalima 10-03-2018 | 9:38 PM
Colombo (News 1st)
சுதந்திரக்கிண்ண முக்கோண சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பங்களாதேஷின் வெற்றி இலக்கு 215 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் மஹமதுல்லா, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இலங்கை அணிக்கு குசல் மென்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஜோடி அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்ததோடு , இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்காக 56 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தனுஸ்க குணதிலக்க 26 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் தனது மூன்றாவது அரைச்சதத்தை எட்டிய குசல் மென்டிஸ் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய குசல் ஜனித் பெரேரா சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் தனது 9 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.
போட்டியில் அவர் 48 பந்துகளில் 74 ஓட்டங்களை விளாசினார்.
மத்திய வரிசையில் உபுல் தரங்க 15 பந்துகளில் 32 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றார்.
இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களைப் பெற்றது.
இது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் சர்வதேச இருபதுக்கு 20 போட்டியொன்றில் ஓர் அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவானது.
இதற்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை சர்வதேச இருபதுக்கு 20 போட்டியொன்றில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் அதிகூடிய ஓட்டங்களாகப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.