உலகெங்கிலும் ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்ஃபோன்கள், கம்ப்யூட்டர்கள், லெப்டாப் போன்ற இலத்திரனியல் சாதனங்களைத் தயாரிக்கும் போது அதிகளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில்,
சுற்றுச்சூழலுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்துபவை ஸ்மார்ட்போன்கள். குறைந்த ஆற்றலில் செயற்படுவதற்காக மிகவும் விலை அதிகமான அரிய உலோகங்களை ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றனர். ஃபோன்களில் உள்ள சிப், போர்ட் போன்றவற்றைத் தயாரிக்கும் போது அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
புதுப்புது ரக ஸ்மார்ட்ஃபோன்கள் வெளிவருவதால் மக்கள் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை ஃபோனை மாற்றி விடுகின்றனர். இதனால் ஃபோன்கள் வீணாக்கப்படுகின்றன. இக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெக்மாஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்திருப்பதாவது,
தகவல் தொழில்நுட்பத்திற்காக அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. தொலைத்தொடர்பு சாதனங்களைத் தயாரிக்கும் போது மாசு வெளியாகின்றது. தற்சமயம் 1.5 சதவீதம் மாசு வெளியாகிறது. 2040 ஆம் ஆண்டிற்குள் 14 சதவீதமாக உயரும். நாம் அனுப்பும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும், செல்போன் அழைப்பிற்கும் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்யும் வீடியோவிற்கும் அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. பொதுவாக தகவல் மையங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை எரிபொருள் மூலம் பெறுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.
என கூறியுள்ளார்.