by Bella Dalima 28-02-2018 | 5:29 PM
தொடர் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் கிழக்குப் பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக பிரகடனம் செய்யப்பட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்துள்ளது.
அங்கு மீண்டும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கௌட்டா பகுதியில் விமானத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் மட்டுமின்றி ஹெலிகொப்டர் மூலம் இரண்டு பெரல் வெடிகுண்டுகளும் வீசப்பட்டதாக சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றி, பத்திரமான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காகவும் ரஷ்யா நிர்ணயித்திருந்த வழித்தடத்தில் கிளர்ச்சியாளர்கள் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டதாலேயே போர் நிறுத்தம் தோல்வியடைந்ததாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.
9 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களினால் சிரியாவில் 550-ற்கும் அதிகமான பொதுமக்களும் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 120-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.