by Bella Dalima 28-02-2018 | 10:46 PM
Colombo (News 1st)
தேசிய பொருளாதாரக் குழுவினால் பிரேரிக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த கடன் முறைமை தொடர்பில் மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின் பிரதானிகளுடன் ஜனாதிபதி நிதியமைச்சில் இன்று கலந்துரையாடினார்.
சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களை வலுப்படுத்துவதற்காக 100 ஒன்றிணைந்த கடன் திட்டத்தை தேசிய பொருளாதாரக் குழு பிரேரித்துள்ளது.
எதிர்வரும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களில் தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது நிதியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச வங்கிகளினால் ஈட்டப்படும் இலாபம், எந்தளவிற்கு மக்களை சென்றடைகின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இலாபம், பொருளாதார செயற்பாடுகளின் போது சாதாரண மக்களையும் சிறு கைத்தொழிலாளர்களையும் சென்றடைவதற்கு திட்டங்களை வகுப்பது மிகவும் முக்கியமானதெனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் பெறும் விலைமனு உள்ளிட்ட செயற்பாடுகளின் போது நிபந்தனைகளைக் குறைத்து அசௌகரியமற்ற வகையில், கைத்தொழிலாளர்கள் கடன் பெறுவதற்குத் தேவையான பின்புலத்தை உருவாக்குவது முக்கியமானதெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.