அலோசியஸ், கசுன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேன இருவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

by Bella Dalima 24-02-2018 | 4:51 PM
Colombo (Newsfirst) முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளுக்காக குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார். இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பரிந்துரைத்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறினார். முறிகள் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.