by Bella Dalima 21-02-2018 | 8:39 PM
முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதின.
இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றன.
அதிகபட்சமாக ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 43 ஒட்டங்களை எடுத்தார். அவுஸ்திரேலிய தரப்பில் அகர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ரிச்சர்ட்சன், டை இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
மழை நின்றதும் போட்டி மீண்டும் ஆரம்பமானது.
அவுஸ்திரேலியாவின் ஆரம்ப வீரர் ஷார்ட் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மற்றொரு ஆரம்ப வீரர் வார்னர் 25 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். அகர் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அணியின் ஸ்கோர் 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால், ஆடுகளம் ஈரமாகி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டக்வொர்த் லூவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில், அவுஸ்திரேலிய அணி 14.4 ஓவர்களில் 103 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என கணிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே 121 ஓட்டங்கள் எடுத்திருந்ததால், 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், முத்தரப்பு T20 தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியதுடன் ICC தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.
கடைசிப் போட்டியின் ஆட்டநாயகனாக அகர் தெரிவு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக கிளென் மேக்ஸ்வெல் தெரிவானார்.