by Bella Dalima 15-02-2018 | 8:54 PM
பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
மிர்பூர் ஷெயார் பங்க்ளா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் தனது கன்னி அரைச்சதத்தை எட்டிய சௌமியர் சர்க்கார், 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
சௌமியர் சர்க்காரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து அணித்தலைவர் மஹமதுல்லா மற்றும் முஸ்பிஹூர் ரஹீம் ஜோடி 73 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்து அணியின் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தியது.
முஸ்பிஹூர் ரஹீம் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் தனது இரண்டாவது அரைச்சதத்தை எட்டினார்.
பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களைப் பெற்றது.
இது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியொன்றில் பங்களாதேஷ் அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
அந்த இலக்கை நோக்கி பதிலளித்தாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மென்டிஸ் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.
அதிரடியாக விளையாடிய தனுஷ்க குணதிலக்க 14 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் கன்னி அரைச்சதத்தை எட்டிய குசல் மென்டிஸ், 27 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசினார்.
தசுன் சானக்க மற்றும் திஸ்ஸர பெரேரா ஜோடி 65 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிப்படுத்தியது.
இலங்கை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக குசல் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.